பூட்டு அன்னலட்சுமியா?

சாஸ்திரத்தின் பெயரில் இன்னும் எத்தனை கற்பனைகள்?

இப்பொழுதெல்லாம் எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்கு ஒரு தெய்வத்தின் பெயரை ஒட்டிவிட்டு, அதற்குப் பின்னால் ஒரு கதை கட்டி, கடைசியில் “இது நம்முடைய சாஸ்திரம்” என்று சொல்லும் பழக்கம் அதிகமாகிவிட்டது.

அந்த வரிசையில் புதிதாகக் கேட்கும் ஒரு கருத்து:

“வீட்டின் பூட்டு அன்னலட்சுமி.”

சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று,

“பூட்டு மகாலட்சுமியின் அம்சம்; அதை அன்னலட்சுமியாகப் பூஜிக்க வேண்டும்”

என்றெல்லாம் கூறுகிறார்கள்.

கேட்பதற்கு பக்தியாக இருக்கலாம்.

ஆனால் பக்தி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சாஸ்திரமாக்கிவிட முடியாது.

ஒரு பொருளுக்கு ‘லட்சுமி’ என்று பெயர் வைத்துவிட்டால் அது சாஸ்திரத்தில் லட்சுமியாகிவிடாது.

முதலில் ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும்

பழைய காலத்தில் கதவை மூடும் அமைப்பே கிடையாது என்று கூறுவதும் சரியல்ல.

சாஸ்திர நூல்களில் கபாடம் என்ற சொல் கதவுத்தாள் அல்லது கதவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அர்கலாஎன்பது கதவை அடைக்கும் தாழ்ப்பாள், அடைப்பான் என்ற பொருளிலும் பழைய சம்ஸ்கிருதப் பயன்பாட்டில் உள்ளது.

ஆகவே,

“பழங்காலத்தில் பூட்டு என்ற கருத்தே கிடையாது”

என்பது நமது வாதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதைவிட மிகவும் வலிமையான உண்மை ஒன்று இருக்கிறது:

கதவைப் பாதுகாப்பதற்கான அமைப்புகள் இருந்தன. ஆனால் அந்தப் பாதுகாப்புச் சாதனத்தையே ‘அன்னலட்சுமி’ அல்லது ‘மகாலட்சுமி’ என்று சாஸ்திரம் அறிவிக்கவில்லை.

இதுதான் முக்கியம்.

நிர்ணயசிந்து என்ன சொல்கிறது?

கமலாகர பட்டர் இயற்றிய நிர்ணயசிந்து, க்ருஹப்ரவேசம் பற்றிய பகுதியில் நாரதரின் வாக்கியத்தை எடுத்துக்காட்டுகிறது:

அகபாடமனாச்சன்னமதத்தபலிபோஜனம் ।
க்ருஹம் ந ப்ரவிசேத் தீமானாபதாமாகரோ ஹி தத் ॥

இதன் கருத்து:

கபாடம் பொருத்தப்படாத, முறையாக மூடப்படாத, செய்யவேண்டிய பலி முதலிய மங்களச் செயல்கள் செய்யப்படாத வீட்டிற்குள் அறிவுடையவன் குடிபுக வேண்டாம்; அத்தகைய நிலை இடர்களுக்கு காரணமாகும்.

நிர்ணயசிந்து க்ருஹப்ரவேசப் பகுதியில் இதனைத் தெளிவாகப் பதிவு செய்கிறது.

கவனிக்க வேண்டியது என்ன?

இங்கு கபாடத்தின் அவசியம் சொல்லப்படுகிறது.

ஆனால்,

“கபாடம் லட்சுமி” என்று சொல்லவில்லை.

அதிலும் குறிப்பாக,

“கபாடத்தை அடைக்கும் பூட்டு அன்னலட்சுமி” என்று எங்கும் சொல்லவில்லை.

இதுதான் சாஸ்திரத்துக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசம்.

க்ருஹ்ய சூத்திரங்கள் என்ன காட்டுகின்றன?

ஹிரண்யகேசி க்ருஹ்ய சூத்திரத்தில் வீட்டைக் கட்டும்போது கதவின் இருபுறத் தூண்களை நிறுவும் விதி மிகத் தெளிவாக வருகிறது.

தெற்குப் பக்கக் கதவுத்தூண் நிறுவுதல், வடக்குப் பக்கக் கதவுத்தூண் நிறுவுதல், வீட்டின் மேற்பகுதி அமைத்தல் ஆகியவற்றுக்குத் தனித்தனி மந்திரங்களும் குறிப்பிடப்படுகின்றன.

அந்த மந்திரங்களில் வீடு,

செல்வம், பசுக்கள், நலம், மக்கள், மகிழ்ச்சி ஆகியவற்றுடன் நிலைத்திருக்க வேண்டும்

என்று பிரார்த்திக்கப்படுகிறது. வீட்டையே மங்களமான உறைவிடமாகப் போற்றும் மந்திரமும் உள்ளது.

அதாவது சாஸ்திரம் எதை மதிக்கிறது?

க்ருஹத்தை.

வாசலை.

கதவுத்தூண்களை.

வீட்டின் மங்களத்தைக்.

ஆனால் வீட்டில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உபகரணத்தையும் எடுத்துக்கொண்டு,

“இது ஒரு லட்சுமி, அது ஒரு லட்சுமி”

என்று தன்னிச்சையாகப் பெயரிடவில்லை.

அப்படியானால் வாசலில் கஜலட்சுமி ஏன்?

இங்குதான் பலர் விஷயங்களை ஒன்றோடு ஒன்று கலக்கிறார்கள்.

வீட்டு வாசலில் அல்லது நுழைவாயிலில் கஜலட்சுமி வடிவத்தை அமைக்கும் சிற்ப மரபுக்கு ஆதாரம் இருக்கிறது.

மாநஸாரம் லட்சுமியின் வடிவத்தை விவரிக்கும்போது, இருபுறமும் யானைகளுடன் உள்ள லட்சுமி வடிவத்தையும் கூறி, அத்தகைய லட்சுமி வடிவத்தை வீடுகளின் நுழைவாயில் மற்றும் மத்தியப் பகுதியில் அமைக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

ஆகவே,

வாசலில் கஜலட்சுமி இருப்பது சாஸ்திர–சிற்ப மரபுடன் தொடர்புடையது.

இதிலிருந்து,

வாசலிலுள்ள இரும்புப் பூட்டே மகாலட்சுமி

என்று எப்படி முடிவு செய்ய முடியும்?

கதவின் மேற்பகுதியில் பெருமாள் திருவுருவம் வைத்தால் கதவு பெருமாள் ஆகிவிடுமா?

கதவில் கருடாழ்வார் திருவுருவம் பொறித்தால் கதவைத் திறக்கும் கைப்பிடி கருடாழ்வார் ஆகிவிடுமா?

அதேபோல,

வாசலில் கஜலட்சுமி இருப்பதால் பூட்டு கஜலட்சுமியாகிவிடாது.

திருவுருவத்திற்கு உரிய மரியாதை ஒன்று.

பயன்பாட்டுப் பொருளின் தன்மை ஒன்று.

இரண்டையும் குழப்பக்கூடாது.

“அன்னலட்சுமி” எங்கே வந்தார்?

இதில்தான் இன்னும் பெரிய கேள்வி இருக்கிறது.

பூட்டு என்பது என்ன செய்கிறது?

வீட்டை மூடுகிறது.

உடமைகளைப் பாதுகாக்கிறது.

அந்நியர் நுழையாமல் தடுக்கிறது.

இதற்கு,

அன்னத்திற்கும் என்ன சம்பந்தம்?

அன்னதானத்திற்கும் என்ன சம்பந்தம்?

உணவுச் செழிப்பிற்கும் என்ன சம்பந்தம்?

வீட்டில் இருக்கும் அரிசி, தானியம், உணவு ஆகியவற்றைப் பாதுகாக்க பூட்டு உதவலாம்.

அதனால்,

பூட்டு = அன்னலட்சுமி

என்று சமன்பாடு போட்டுவிட முடியாது.

அப்படியானால் அரிசியை வைத்திருக்கும் பாத்திரம் அன்னலட்சுமியா?

அந்தப் பாத்திரத்தை வைத்திருக்கும் அலமாரி அன்னலட்சுமியா?

அலமாரிக்குச் செய்யப்பட்ட சாவி அன்னலட்சுமியா?

சாவியை வைத்திருக்கும் பை அன்னலட்சுமியா?

இப்படியே போனால் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தேவதையின் பெயரை உருவாக்க வேண்டிய நிலை வந்துவிடும்.

இதற்கு பெயர் சாஸ்திரம் அல்ல; கட்டுக்கதை.

ஸ்ம்ருதிமுக்தாபலத்தை இழுத்துவர வேண்டாம்

வைத்யநாத தீக்ஷிதர் இயற்றிய ஸ்ம்ருதிமுக்தாபலம், ஆஹ்னிகம் முதலான தர்மாசாரங்களை விரிவாகத் தொகுத்த தர்மசாஸ்திர நிபந்த நூல். அதன் தமிழ் உரையுடன் கூடிய பதிப்புகளும் கிடைக்கின்றன.

ஆனால் கிடைக்கக்கூடிய உரைகளில்,

“வீட்டுப் பூட்டு அன்னலட்சுமி”

என்றோ,

“பூட்டு மகாலட்சுமி”

என்றோ காட்டக்கூடிய பிரமாணம் கிடைக்கவில்லை.

ஆகவே ஸ்ம்ருதிமுக்தாபலத்தின் பெயரைச் சொல்லி இப்படிப்பட்ட கருத்துக்கு பெருமை சேர்ப்பது முறையல்ல.

ஒரு நூலின் பெயரைச் சொல்வது ஆதாரம் அல்ல.

எந்த காண்டம்?
எந்தப் பகுதி?
எந்த வாக்கியம்?
யார் கூறிய ஸ்ம்ருதி?
என்ன பொருள்?

இவற்றைக் காட்ட வேண்டும்.

அதுதான் பிரமாணம்.

சாஸ்திரம் தெரியாமல் சாஸ்திரத்தின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள்

இன்று ஒரு புதிய நோய் உருவாகிவிட்டது.

எதற்கெல்லாம் உணர்ச்சி கிளப்ப முடியுமோ அதற்கெல்லாம்,

“இது மகாலட்சுமி...”
“இது அன்னலட்சுமி...”
“இதைத் தொட்டால் தோஷம்...”
“இதை இப்படிச் செய்தால் லட்சுமி போய்விடுவாள்...”

என்று பேசுவது.

இதற்கெல்லாம் ஒருவர் ஒருமுறை கேட்க வேண்டிய ஒரே கேள்வி:

“பிரமாணம் எங்கே?”

“எங்கள் வீட்டில் இப்படித்தான் சொல்வார்கள்” என்பது பிரமாணமல்ல.

“ஒரு பெரியவர் சொன்னார்” என்பது பிரமாணமல்ல.

“வாடிக்கையில் இருக்கிறது” என்பது பிரமாணமல்ல.

“எனக்குத் தோன்றுகிறது” என்பதும் பிரமாணமல்ல.

சாஸ்திரம் என்று சொன்னால்,

சாஸ்திர வாசகம் வேண்டும்.

பக்திக்கும் பொய்க்கும் நடுவில் ஒரு கோடு இருக்கிறது

பூட்டை மிதிக்காமல் வைத்துக் கொள்ளுங்கள்.

சாவியைத் தொலைக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வீட்டுப் பொருள்களை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.

வாசலில் இருக்கும் கஜலட்சுமி திருவுருவத்தை மரியாதையுடன் வணங்குங்கள்.

இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால்,

“பூட்டு அன்னலட்சுமி; இதுதான் சாஸ்திரம்”

என்று சொல்லத் தொடங்கும் இடத்தில் பிரச்சினை ஆரம்பமாகிறது.

பக்தியை வளர்க்க வேண்டுமென்றால் உண்மையைச் சொல்லுங்கள்.

பொய்யான கதையை உருவாக்கி அதற்கு தெய்வத்தின் பெயரை ஒட்டாதீர்கள்.

சாஸ்திரத்தைச் சொல்லுங்கள்; சொந்தக் கற்பனையை அல்ல!

கஜலட்சுமி வாசலில் இருக்கலாம்.

க்ருஹலட்சுமி என்ற மங்களக் கருத்து இருக்கலாம்.

கபாடம் வீட்டின் பாதுகாப்புக்கு அவசியமாக இருக்கலாம்.

அர்கலா கதவை அடைக்கப் பயன்படலாம்.

ஆனால் இவற்றையெல்லாம் மிக்சியில் போட்டு அரைத்து, “பூட்டு அன்னலட்சுமி” என்று புதிய சாஸ்திரம் தயாரிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

தெய்வத்தின் பெயரைச் சொன்னால் மட்டும் பொய் புனிதமாகிவிடாது.

பிரமாணம் இல்லாததைப் பிரமாணம் என்று பேசுவதுதான் சாஸ்திரத்திற்கு செய்யப்படும் அவமரியாதை.

சாஸ்திரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில்,

சாஸ்திரத்தில் இல்லாததைச் சாஸ்திரத்தின் பெயரில் பேசுவதை நிறுத்த வேண்டும்.

**பூட்டைப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துங்கள்.

கஜலட்சுமியை பக்தியுடன் வணங்குங்கள்.
இரண்டையும் ஒன்றாக்கி புதிய புராணம் எழுதாதீர்கள்.**