சுபஸ்வீகாரத்தை ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ விழாவாக மாற்றாதீர்கள்! பித்ரு கர்மத்தில் சாஸ்திரம் முக்கியமா? ஊர் வழக்கம் முக்கியமா?

ஒருவர் காலமான பிறகு செய்யப்படும் அபரகர்மங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த கவனத்துடன் அனுஷ்டிக்கப்பட வேண்டியவை. அவை திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சிகளைப் போல நமது விருப்பத்திற்கேற்ப புதுமைகளைச் சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் அல்ல.

முதல் நாள் தொடங்கி தசாஹம், ஏகோதிஷ்டம், ஸபிண்டீகரணம் முதலான கர்மங்கள் முடிந்த பின்னர், இன்று பல குடும்பங்களில் பதின்மூன்றாம் நாள் “சுபஸ்வீகாரம்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஸ்ரீவைஷ்ணவ குடும்ப வழக்கங்களிலும் இதற்குரிய தனிப்பட்ட நடைமுறைகள் காணப்படுகின்றன.

ஆனால் இந்த இடத்தில்தான் இன்று ஒரு மிகப்பெரிய குழப்பம் உருவாகியிருக்கிறது.

சுபஸ்வீகாரம் என்ற பெயரில் நாம் சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறோமா? அல்லது புதிதாக ஒரு ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கலாச்சாரத்தை உருவாக்குகிறோமா?

இந்தக் கேள்வியை ஒவ்வொரு குடும்பமும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பதின்மூன்றாம் நாள் நடைபெறுவது என்ன?

அபரகர்மத்தின் முக்கியமான ஆரம்பகட்ட கிரியைகள் நிறைவடைந்த பின்னர், பதின்மூன்றாம் நாள் ஒரு குறிப்பிட்ட அளவில் மங்களத்தை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று நடைமுறையில் உள்ளது.

அன்றைய தினத்தில் சம்பந்தப்பட்ட உறவுமுறைகளில் இருப்பவர்கள் — குறிப்பாக மாமா முறை முதலான உறவினர்கள் — வஸ்திரம் முதலியவற்றை வழங்குவது சில குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.

அதேபோல மாமனார் தனது மருமகனுக்குத் தனது சக்திக்கேற்ப வஸ்திரமோ, சுவர்ணமோ, ரஜதமோ வழங்கி ஆசீர்வதிக்கும் குடும்ப மரபுகளும் இருக்கின்றன.

இவற்றை அந்தந்த குடும்பத்தின் தேசாசாரம், குலாசாரம், குடும்பாசாரம், ஆசார்ய–ப்ருஹஸ்பதி வழிகாட்டுதல்ஆகியவற்றோடு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இதிலிருந்து இன்னொரு புதிய விதியை நாம் உருவாக்க முடியாது.

“வந்திருக்கிற அனைவருக்கும் ஏதாவது ஒரு பொருள் கொடுத்து அனுப்பியே ஆகவேண்டும்!”

என்று சாஸ்திரம் எங்கே சொன்னது?

சுபஸ்வீகாரம் என்றால் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ அல்ல!

இன்று என்ன நடக்கிறது?

“வந்தவர்களுக்கு என்ன கொடுக்கலாம்?”

“ஒரு எவர்சில்வர் டப்பா வாங்கலாமா?”

“ஒரு தட்டு கொடுக்கலாமா?”

“ஒரு பாத்திரம் கொடுக்கலாமா?”

“ஒரு பெட்டி போட்டு எல்லோருக்கும் கொடுத்துவிடலாமா?”

என்று திருமண வீட்டில் பேசுவதைப் போலவே அபரகர்ம வீட்டிலும் பேசத் தொடங்கிவிட்டோம்.

இதற்கு அழகாக இன்னொரு பெயரும் வைத்துவிட்டோம்:

‘ரிட்டர்ன் கிஃப்ட்!’

எதற்கான ரிட்டர்ன் கிஃப்ட்?

ஒரு குடும்பத்தில் ஒருவர் காலமாகியிருக்கிறார். அவருக்காகப் பித்ரு கர்மம் நடைபெற்றிருக்கிறது. துக்கத்தில் பங்குகொள்ள உறவினர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் வந்ததற்காக அவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்து அனுப்புவதை எந்த அடிப்படையில் அபரகர்மத்தின் ஒரு அங்கமாக மாற்றுகிறோம்?

சமூக மரியாதையாக ஒருவர் ஏதாவது செய்வது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால்,

அதைச் “சுபஸ்வீகாரத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயம்” என்று மாற்றிவிடக்கூடாது.

தானம் என்றால் என்ன கிடைத்ததையாவது கொடுப்பதல்ல!

சாஸ்திரம் “தானம் செய்யுங்கள்” என்று மட்டும் கூறிவிட்டு நிற்கவில்லை.

எந்தப் பொருள்?

யாருக்குக் கொடுக்க வேண்டும்?

எந்தக் காலத்தில்?

எந்தக் கர்மாவின் அங்கமாக?

எந்த நோக்கத்துடன்?

என்பதற்கெல்லாம் தானதர்மத்தில் இடம் இருக்கிறது.

அதனால்தான் தசதானம், சோடசதானம் போன்ற வகைப்பாடுகளையே தர்மசாஸ்திர மரபு வழங்குகிறது.

தசதானம் — பத்து முக்கிய தானங்கள்

பொதுவாகக் குறிப்பிடப்படும் தசதானங்கள்:

1. கோதானம் — பசு
2. பூதானம் — பூமி
3. திலதானம் — எள்
4. ஹிரண்யதானம் — பொன்
5. ஆஜ்யதானம் — நெய்
6. வஸ்திரதானம் — வஸ்திரம்
7. தான்யதானம் — தானியம்
8. குடதானம் — வெல்லம்
9. ரஜததானம் — வெள்ளி
10. லவணதானம் — உப்பு

இதுதான் தானம் பற்றிய சாஸ்திர அணுகுமுறைக்கும், இன்று நாம் உருவாக்கியுள்ள “ஏதாவது ஒரு பொருளை வாங்கி எல்லோருக்கும் கொடுத்துவிடுவோம்” என்ற அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு.

சோடசதானம் — பதினாறு தானங்கள்

சோடசதானத்திற்குப் பல நூல் மற்றும் பிரயோக மரபுகளில் பட்டியல் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாகக் காணப்படும் ஒரு மரபில்:

பூமி, ஆசனம், ஜலம், வஸ்திரம், தீபம், அன்னம், தாம்பூலம், சத்திரம், கந்தம், மாலை, பழம், சய்யை, பாதுகை, கோ, காஞ்சனம், ரஜதம்

ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

எனவே எந்தக் கர்மாவில் எந்தத் தானத்தைச் செய்ய வேண்டும் என்பதை அந்தந்த குடும்பம் பின்பற்றும் பத்ததி மற்றும் ப்ருஹஸ்பதியின் வழிகாட்டுதலின்படியே தீர்மானிக்க வேண்டும்.

இதுதான் சாஸ்திர வழி.

அப்படியானால் இந்த எவர்சில்வர் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ எங்கிருந்து வந்தது?

இதற்குத்தான் தெளிவான பதில் தேவை.

எவர்சில்வர் தட்டு, டப்பா, பாத்திரம் முதலியவற்றை வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டும் என்று எந்த அபரகர்ம சாஸ்திர விதி கூறுகிறது?

எந்த ஸ்ம்ருதி கூறுகிறது?

எந்த அபரகர்ம பத்ததி கூறுகிறது?

எந்தப் பிரயோக நூல் கூறுகிறது?

அப்படிக் கொடுத்தால் ஏற்படும் சாஸ்திரபூர்வமான பலன் என்ன?

அதற்குப் பிரமாணம் எங்கே?

இவற்றிற்குப் பதில் இல்லையென்றால், அதை ஒரு குடும்பம் தனிப்பட்ட முறையில் பின்பற்றும் புதிய சமூக வழக்கமாக வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் “இது சுபஸ்வீகாரத்தில் செய்ய வேண்டிய தானம்” என்று சொல்லக்கூடாது.

சனி ஆதிக்கப் பொருள் என்ற விஷயத்தையும் அலட்சியப்படுத்த முடியாது

இரும்பு முதலான சில பொருட்கள் சனியுடன் தொடர்புபடுத்தப்படும் ஜோதிட மரபுகளும் இருக்கின்றன.

அப்படியானால் இன்னும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது:

சனியின் ஆதிக்கத்திற்குரியதாகக் கருதப்படும் ஒரு பொருளை, சுபத்தை ஸ்வீகரிக்கும் நாளில், வந்திருக்கிற அனைவருக்கும் தானமாக வழங்குவதால் என்ன சாஸ்திரபூர்வமான சுபபலன் ஏற்படும்?

அப்படிப்பட்ட ஒரு பலனை அபரகர்ம சாஸ்திரம் விதித்ததாகக் காட்டக்கூடிய பிரமாணம் எங்கே?

அதைத்தான் முதலில் காட்ட வேண்டும்.

“இப்படிக் கொடுத்தால் கண்டிப்பாக சனி தோஷம் வரும்” என்று ஆதாரமில்லாமல் நாம் இன்னொரு விதியை உருவாக்க வேண்டியதில்லை.

ஆனால் அதே அளவு உறுதியாக,

“இவ்வாறு கொடுத்தால் சுபஸ்வீகாரத்தில் இன்ன சுபபலன் ஏற்படும்” என்று சாஸ்திரம் எங்கும் விதித்ததாகப் பிரமாணம் காட்டாமல் கூறவும் முடியாது.

அப்படியிருக்கும்போது ஏன் இந்தத் தேவையற்ற பரிசுப்பொருள் கலாச்சாரத்தை அபரகர்மத்திற்குள் கொண்டு வர வேண்டும்?

குடும்ப வழக்கம் எல்லாமே சாஸ்திரம் ஆகிவிடாது!

இங்கே இன்னொரு ஆபத்தான வார்த்தை வருகிறது:

“எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்வார்கள்!”

சரி.

எத்தனை தலைமுறையாக?

அதற்கான அடிப்படை என்ன?

உங்கள் ஆசார்யர் விதித்தாரா?

பத்ததியில் இருக்கிறதா?

ப்ருஹஸ்பதி கூறினாரா?

அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் யாரோ செய்ததைப் பார்த்து இன்னொருவர் செய்தாரா?

பின்னர் அதை மூன்றாவது குடும்பம் பின்பற்றியதா?

இப்படித்தான் பல புதிய வழக்கங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு “எங்கள் சம்பிரதாயம்” என்ற பெயரைப் பெற்றுவிடுகின்றன.

பழக்கம் என்பது வேறு; பிரமாணம் என்பது வேறு.

குடும்ப வழக்கம் என்பது வேறு; சாஸ்திர விதி என்பது வேறு.

இரண்டையும் கலக்காதீர்கள்.

இன்று ‘ரிட்டர்ன் கிஃப்ட்’; நாளை அது ‘சாஸ்திரம்’!

இதுதான் இன்னும் பெரிய அபாயம்.

முதல் தலைமுறை:

“சும்மா வந்தவர்களுக்குக் கொடுத்தோம்.”

இரண்டாவது தலைமுறை:

“எங்கள் வீட்டில் இப்படிக் கொடுப்பது வழக்கம்.”

மூன்றாவது தலைமுறை:

“எங்கள் சம்பிரதாயத்தில் கொடுக்க வேண்டும்.”

நான்காவது தலைமுறை:

“கொடுக்காவிட்டால் தோஷம்!”

இப்படித்தான் பிரமாணமே இல்லாத ஒரு சமூகப் பழக்கம் காலப்போக்கில் சாஸ்திரத்தின் பெயரை எடுத்துக்கொள்கிறது.

இதைத்தான் இப்போதே தடுக்க வேண்டும்.

தேவையில்லாததைச் செய்யும்போது தேவையானதை இழக்க நேரிடும்!

இந்தக் கட்டுரையின் மிக முக்கியமான எச்சரிக்கை இதுதான்.

ஒரு மரணம் ஏற்பட்ட குடும்பத்திற்கு அடுத்த ஒரு வருடத்தில் எத்தனை கடமைகள் இருக்கின்றன?

மாஸிகங்கள் இருக்கின்றன.

ஊனமாஸிகங்கள் இருக்கின்றன.

அந்தந்த சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய பித்ரு கர்மங்கள் இருக்கின்றன.

வருஷாப்திகம் இருக்கிறது.

அவற்றிற்கெல்லாம் பொருளாதார சக்தியும் தேவை.

அப்படியிருக்க பதின்மூன்றாம் நாள்,

50 பேருக்கு பாத்திரம்!

100 பேருக்குத் தட்டு!

150 பேருக்கு டப்பா!

என்று பல்லாயிரக்கணக்கில் செலவழித்துவிட்டு, பின்னர் சாஸ்திரம் விதித்த கர்மம் வரும்போது —

“கொஞ்சம் சுருக்கிக் கொள்ளலாமா?”

“இந்த மாஸிகத்தை விட்டுவிடலாமா?”

“இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?”

என்று கேட்பது என்ன நியாயம்?

சாஸ்திரம் கேட்காத இடத்தில் செலவழித்துவிட்டு, சாஸ்திரம் கேட்கும் இடத்தில் செலவைக் குறைப்பது தர்மமல்ல!

இதைத்தான் ஒவ்வொரு குடும்பமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பித்ருக்களுக்குரியதைப் பகட்டிற்காகச் செலவழிக்காதீர்கள்!

நமக்குப் பொருளாதார வசதி அதிகமாக இருக்கலாம்.

அப்படியானால் இன்னும் சிறப்பாக சாஸ்திரம் விதித்த தானங்களைச் செய்யலாம்.

தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

வஸ்திரதானம் செய்யலாம்.

தான்யம் வழங்கலாம்.

அந்தந்த கர்மாவுக்குரிய தானங்களை முறையாகச் செய்யலாம்.

ப்ருஹஸ்பதி வழிகாட்டுதலின்படி பித்ரு கைங்கரியத்தைச் சிறப்பாகச் செய்யலாம்.

ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக சாஸ்திரத்தில் இல்லாத புதிய சடங்கை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

பூர்ண சுபஸ்வீகாரத்தையும் பதின்மூன்றாம் நாள் வழக்கத்தையும் குழப்பாதீர்கள்

இன்றைய நடைமுறையில் பதின்மூன்றாம் நாளில் ஒரு குறுகிய அளவிலான சுபஸ்வீகாரம் பல குடும்பங்களில் நடைபெறுகிறது.

அதன் பின்னரும் மறைந்தவருக்கான மாஸிகாதி கர்மங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வருஷாப்திகத்திற்குப் பின்னர் குடும்பம் முழுமையாக வழக்கமான சுபகாரிய அனுஷ்டானங்களுக்குத் திரும்புவது தொடர்பாகவும் அந்தந்த ஸ்ரீவைஷ்ணவ குடும்பங்களின் ஆசார்ய–பத்ததி மரபுகளைப் பின்பற்ற வேண்டும்.

எனவே பதின்மூன்றாம் நாள் நடைபெறும் சுபஸ்வீகாரத்தை வைத்துக்கொண்டு,

“எல்லாம் முடிந்துவிட்டது; இனி இது ஒரு சுபநிகழ்ச்சி”

என்ற மனநிலையை உருவாக்குவது சரியல்ல.

பித்ரு தீக்ஷையும் பித்ரு கைங்கரியப் பொறுப்பும் அதோடு முடிந்துவிடுவதில்லை.

அபரகர்மத்தை ஆடம்பரமாக்காதீர்கள்!

மரணம் நிகழ்ந்த வீட்டில் நமது கவனம் எதில் இருக்க வேண்டும்?

இறந்தவருக்குச் செய்ய வேண்டிய கர்மாவில் இருக்க வேண்டும்.

பித்ருக்களுக்குச் சேர வேண்டிய கைங்கரியத்தில் இருக்க வேண்டும்.

சாஸ்திரம் விதித்த தானத்தில் இருக்க வேண்டும்.

ஆசார்யர்கள் காட்டிய வழியில் இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு,

“என்ன டப்பா கொடுக்கலாம்?”

“எந்தத் தட்டு அழகாக இருக்கும்?”

“அவர்கள் வீட்டில் பெரிய பாத்திரம் கொடுத்தார்கள்; நாமும் கொடுக்க வேண்டாமா?”

என்று பேசத் தொடங்கினால் —

அங்கே பித்ரு கர்மம் பின்னால் சென்றுவிட்டது; சமூகப் பகட்டு முன்னால் வந்துவிட்டது!

ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள்!

இனி யாராவது,

“பதின்மூன்றாம் நாள் வந்தவர்கள் எல்லோருக்கும் எவர்சில்வர் பாத்திரம் கொடுக்க வேண்டும்; அதுதான் வழக்கம்”

என்று சொன்னால் வாதம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

அமைதியாக ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள்:

“இதற்கு சாஸ்திரப் பிரமாணம் என்ன?”

“எங்கள் வீட்டில் செய்வார்கள்” என்பது பதில் அல்ல.

“எல்லோரும் செய்கிறார்கள்” என்பது பதில் அல்ல.

“கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது” என்பது பதில் அல்ல.

“நம்முடைய கௌரவம்” என்பது பதில் அல்ல.

பிரமாணம் இருந்தால் பின்பற்றுவோம்.

பிரமாணம் இல்லையென்றால் அதைச் சாஸ்திரத்தின் பெயரில் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டாம்.

சுபஸ்வீகாரம் — சுபத்தை ஸ்வீகரிப்பதாக இருக்கட்டும்; சமூக அழுத்தத்தை அல்ல!

பித்ரு கர்மத்தில் நமக்குத் தேவையானது —

பகட்டு அல்ல; பக்தி.

ஆடம்பரம் அல்ல; அனுஷ்டானம்.

ரிட்டர்ன் கிஃப்ட் அல்ல; சாஸ்திரபூர்வமான தானம்.

ஊரார் பாராட்டு அல்ல; பித்ருக்களுக்குரிய கைங்கரியம்.

புதிய பழக்கம் அல்ல; பிரமாணபூர்வமான சம்பிரதாயம்.

தேவையில்லாததைச் செய்து, தேவையான தர்மத்தை இழக்காதீர்கள்!

சாஸ்திரம் கேட்காத செலவைச் செய்து, சாஸ்திரம் கேட்ட கர்மத்தைச் சுருக்காதீர்கள்!

‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கலாச்சாரத்தை அபரகர்மத்திற்குள் கொண்டு வந்து, நாளை அதையே ‘சம்பிரதாயம்’ என்று மாற்றாதீர்கள்!

பித்ரு கர்மம் — பித்ருக்களுக்காக இருக்கட்டும்.
பகட்டுக்காக அல்ல!